புதுடெல்லி:
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான குழந்தை பெற்றுக் கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய புத்தக தொகுப்பை ஆயுர்வேதா, யோகா மற்றும் சித்தா, யுனானி (ஆயுஷ்) துறை வெளியிட்டது. இந்த நிகழ்ச்சியில், ஆயுஷ் துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கலந்து கொண்டார்.
இந்த புத்தகத்தில், “கர்ப்பிணி பெண்கள் ஆசை, கோபம், பிணைப்பு, வெறுப்பு மற்றும் இச்சை ஆகியவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும். டீ, காபி, சர்க்கரை, மாவு பொருட்கள், கரம் மசாலா, எண்ணையில் வறுத்த உணவுப் பொருட்கள், முட்டை மற்றும் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். தெய்வீக சிந்தனை இருக்க வேண்டும். இது வயிற்றில் வளரும் கருவில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்” உள்ளிட்ட அறிவுரைகள் கூறப்பட்டிருந்தன.
இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆயுஷ் துறை அமைச்சர் நாயக் கூறுகையில், புத்தகத்தில் உள்ளவை கட்டாயம் அல்ல, அறிவுரைகள் தான் என்று கூறினார்.
இந்நிலையில், கர்ப்பிணி பெண்களுக்காக ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள புத்தகத்தில் உள்ளவை முட்டாள்தனமான, அறிவியல் பூர்வமற்ற பிதற்றல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாடியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பிருந்தா காரத், கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து குறித்து ஆலோசனைகள் வழங்குவதற்கு பதிலாக, முட்டாள்தனங்களை பரப்புகிறது என்றார்.