செய்திகள்

அயனாவரத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் சிறையில் அடைப்பு

அயனாவரத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர்.

அம்பத்தூர்:

அயனாவரம் சோலை தெருவைச் சேர்ந்தவர் சாலமோன்ராஜா. எலக்ட்ரீசியனான இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக சாலமோன்ராஜா, கல்லூரி மாணவியை பின் தொடர்ந்து சென்று தொந்தரவு கொடுத்துள்ளார்.

எழும்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவியிடம் தினமும் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு பேசுவதை சாலமோன்ராஜா வழக்கமாக வைத்திருந்தார்.

நேற்று மதியம் 12.30 மணி அளவில் அயனாவரத்தில் உள்ள நூர் ஓட்டல் அருகில் வைத்து சாலமோன்ராஜா, மாணவியை வழிமறித்தார்.

அப்போது தன்னை காதலிக்க சொல்லி சாலமோன்ராஜா வற்புறுத்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த சாலமோன், மாணவியை கத்தியால் குத்தினார்.

இதில் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பின் அவர் வீடு திரும்பினார்.

இதற்கிடையே தப்பி ஓட முயன்ற சாலமோன்ராஜாவை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சாலமோன்ராஜாவை கைது செய்து சிறையில் அடைந்தனர்.

SCROLL FOR NEXT