கோப்புபடம் 
செய்திகள்

அவினாசி அருகே லாரி மீது வேன் மோதல் - டிரைவர் காயம்

அவினாசி அருகே லாரி மீது வேன் மோதியதில் டிரைவர் பலத்த காயமடைந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மாலை மலர்

அவினாசி:

சேலத்தில் இருந்து பார்சல் ஏற்றிக்கொண்டு நேற்று ஒரு லாரி கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியை சேலத்தை சேர்ந்த பிரவின்குமார் (வயது 29) என்பவர் ஓட்டினார்.

லாரி அவினாசியை அடுத்த நல்லிகவுண்டம்பாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தது. லாரிக்கு பின்னால் வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரி மீது வேன் மோதியது.

இதில் வேனை ஓட்டி வந்த டிரைவர் சாகில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

இந்த விபத்தில் லாரியின் பின் பகுதியும், வேனின் முன்பகுதியும் சேதம் அடைந்தது. இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் சம்பவ இடம் சென்று விபத்தில் சிக்கிய இரண்டு வாகனங்களையும் அப்புறப்படுத்தினர்.

பின்னர் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.