அவினாசி:
திருப்பூர் அங்கேரிபாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 47). இவர் கோவையிலுள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரும் இவரது மனைவி விஜயலட்சுமி (37) இருவரும் மோட்டார் சைக்கிளில் அரூரில் இருந்து திருப்பூர் வந்து கொண்டிருந்தனர். அவினாசி கைகாட்டி அருகே வந்த போது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் வெங்கடேசன் மோட்டார் சைக்கிளை முந்திச்சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராதவிதமாக வெங்கடேசனின் மனைவி விஜயலட்சுமி மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி ரோட்டில் விழுந்தார். இதில் அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விஜயலட்சுமி ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.