புதுச்சேரி:
முத்தியால்பேட்டை போலீஸ் குடியிருப்பில் வசித்த வந்தவர் சண்முகம். இவர் போலீஸ் சிறப்பு பிரிவில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
இன்றுகாலை கவர்னர் கிரண்பேடி மழை சேதங்களை பார்வையிட்டதையொட்டி உதவி சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் இன்றுகாலை முத்தியால்பேட்டை- கருவடிக்குப்பம் சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் சென்றபோது அந்த வழியாக வந்த ஆட்டோ மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சண்முகத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அங்கிருந்தவர்கள் சண்முகத்தை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆஸ்பத்திரி வாயிலில் இருந்து சண்முகத்தை கொண்டு செல்ல ஸ்டெச்சர் வசதி இல்லாததால் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. பின்னர் டாக்டரிடம் காண்பித்த போது சண்முகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
உடனடியாக ஸ்டெச்சர் வசதி இருந்திருந்தால் சண்முகத்தின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என அவரை அழைத்து வந்தவர்கள் வருத்தத்துடன் கூறினர். இறந்து போன சண்முகத்துக்கு ஜோதிஅம்மாள் என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.