பாகூர்:
கிருமாம்பாக்கத்தை அடுத்த பிள்ளையார் குப்பம் தனியார் மருத்துவ கல்லூரியில் இருந்து ஆட்டோ ஒன்று பயணி ஒருவரை ஏற்றி கொண்டு வெளியே வந்தது. அந்த ஆட்டோவை கடலூர் புதுபாளையத்தை சேர்ந்த சுதாகர் (வயது 34) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வாகனம் ஒன்று வந்தது. அதன் மீது ஆட்டோ மோதாமல் இருப்பதற்காக திருப்பினார். இதில், ஆட்டோ திடீரென தலைகுப்புற கவிழ்ந்தது.
ஆட்டோவின் பின்னால் அமர்ந்திருந்த பயணி படுகாயம் அடைந்து அந்த இடத்திலேயே உயிர் இழந்தார். அவருக்கு 48 வயது இருக்கும். எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
ஆட்டோ டிரைவர் சுதாகர் படுகாயம் அடைந்தார். அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது சம்பந்தமாக கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர்- புதுவை சாலையில் விபத்துகள் அடிக்கடி நடந்து வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த சாலையில் நடந்த பல்வேறு விபத்துகளில் 20-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.
கடலூர் - புதுவை சாலை அகலப்படுத்தப்படாமல் மிக குறுகலாக உள்ளது. மேலும் அதிக எண்ணிக்கையில் இந்த பாதையில் வாகனங்கள் செல்கின்றன. அதற்கு ஏற்றதாக சாலை இல்லை. சாலையில் விளக்கு வசதியும் இல்லை. போக்குவரத்தை சீர்செய்ய போலீசாரும் இல்லை. இதுபோன்ற காரணங்களால் இந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
தொடர் விபத்துகள் நடந்து வருவதால் அந்த பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.