செய்திகள்

சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 236-6: வலுவான நிலையில் இந்தியா

சிட்னியில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் என்ற நிலையில் பின்தங்கியுள்ளது. #AUSvIND #SydneyTest

மாலை மலர்

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அபாரமாக விளையாடிய புஜாரா 193 ரன்கள் விளாசினார். ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 150 ரன்கள் எடுத்தார். மயாங்க் அகர்வால் 77 ரன்களும், ஜடேஜா 81 ரன்களும் அடித்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் (2ம் நாள்) விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. நிதானமாக ஆடிய ஹாரிஸ் 79 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். கவாஜா 27 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இந்த ஜோடி பிரிந்தபின்னர் ஆஸ்திரேலிய அணி தடுமாறத் தொடங்கியது. மார்ஷ் (8), லபூஸ்சாக்னே (38), ஹெட் (20) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. தேநீர் இடைவேளை வரை 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.