கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முதல்நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப், ஜப்பானின் நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹாலெப் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினர். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்றிலும் அதிரடியாக விளையாடிய ஹாலெப் அந்த செட்டையும் 6-2 என கைப்பற்றினார். இதன்மூலம் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற ஹாலெப் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, சக நாட்டு வீராங்கனையான பார்போரா ஸ்டிரைகோவாவை எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் செட்டை 6-7 என ஸ்டிரைகோவா கைப்பற்றினார். அதன்பின் கவனமாக விளையாடிய பிளிஸ்கோவா அடுத்த இரண்டு செட்களையும் 6-3, 6-2 என கைப்பற்றினார். இதன்மூலம் 6-7, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்ற பிளிஸ்கோவா காலிறுதிக்கு தகுதி பெற்றார்.