செய்திகள்

ஆஷஸ் முதல் டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் ஆஸ்திரேலியா

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி விளையாடி வருகின்றது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 302 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 328 ரன்கள் குவித்தது. இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் கேப்டன் ஸ்மித்துதான். அவர் நிலைத்து நின்று விளையாடி அவுட்டாகாமல் 141 ரன்கள் குவித்தார். ஒருபக்கம் விக்கெட்டுக்கள் இழந்த நிலையில் மறுமுனையில் நங்கூரம் பாய்ச்ச மாதிரி நிலைத்து நின்று விளையாடினார். இதனால் 261 பந்துகளை சந்தித்து சதம் அடித்தார்.

328 ரன்கள் எடுத்த நிலையில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆஸி. பவுலர்கள் அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இங்கிலாந்தின் ரூட், மொயீன் அலி மற்றும் ஜான்னி பேய்ர்ஸ்டோ மட்டுமே நிலைத்து நின்று விளையாடி ரன்களை சேர்த்தனர். இறுதியில் 71 ஓவர்கள் முடிவில் 195 ரன்களை எடுத்த இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஸ்டார்க், ஹாஸ்லில் வுட் மற்றும் நேதன் லயான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்து விளையாடி வருகிறது. டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கி நிதானமாக ஆடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT