செய்திகள்

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் - பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 534 ரன் குவிப்பு

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் முன்னணி பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணி 534 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. #AUSvSL

கான்பெரா:

ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பெராவில் நடந்து வருகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 384 ரன்கள் குவித்தது. ஜோ பர்னஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். ஹெட் 161 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

2-வது நாள் ஆட்டத்தில் பர்ன்ஸ் 180 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். புதுமுக வீரர் பேட்டர்சன் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 2-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது முதல் சதம் ஆகும்.

இறுதியில், ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 534 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பேட்டர்சன் 114 ரன்னும், கேப்டன் பெய்ன் 45 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இலங்கை அணி சார்பில் பெர்னாண்டோ 3 விக்கெட் வீழ்த்தினார்.

அதன்பின்னர், இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரரான திமுத் கருணாரத்னே 46 ரன் எடுத்து ரிடயர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் லஹிரி திரிமானே 41 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து, தினேஷ் சண்டிமால் 15 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 6 ரன்னிலும் அவுட்டாகினர். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. #AUSvSL