முதல் செட்டை ரோஜர் பெடரர் 6-2 என எளிதாக கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் சிலிச் கடும் நெருக்கடி கொடுத்தார். அதற்கு எந்த வகையிலும் குறையாமல் பெடரர் ஈடுகொடுத்து விளையாடினார். இதனால் 2-வது செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் சிலிச் 7(7)-6(5) என 2-வது செட்டை கைப்பற்றினார்.
3-வது செட்டை 6-3 என ரோஜர் பெடரர் கைப்பற்றினார். அதற்குப் பதிலடியாக சிலிச் 4-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். இருவரும் 2-2 என சமநிலை பெற்றதால் ஆட்டம் கடைசி செட்டான 5-வது செட்டிற்கு சென்றது.
வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டில் சிலிச் சிறப்பாக விளையாடுவார். இதனால் ‘டை பிரேக்கர்’ வரை செல்லும் என்று எதிர்பார்த்த நிலையில், ரோஜர் பெடரர் 6-1 என எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
பெடரருக்கு இது 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இதன்மூலம் முதன்முறையாக 20 கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் எனவும், ஒட்டுமொத்தமாக (வீராங்கனைகளையும் சேர்த்து) 4-வது நபர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். அத்துடன் அதிக வயதில் ஆஸ்திரேலிய ஓபனை வென்றவர் என்ற புகழையும் பெற்றுள்ளார்.