டிமிட்ரோவ் முதல் செட்டை 4-6 என இழந்தாலும், 2-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். ஆனால் 3-வது செட்டை 3-6 எனவும், 4-வது செட்டை 4-6 எனவும் இழந்து போட்டியில் இருந்து வெளியேறினார். 1997-ம் ஆண்டுடிற்குப் பிறகு முர்ரேயை தவிர்த்து அரையிறுதிக்கு முன்னேறும் முதல் இங்கிலாந்து வீரர் எட்மண்ட் ஆவார். டிமிட்ரோவ்-ஐ வீழ்த்த எட்மண்டுக்கு 2 மணி நேரம் 49 நிமிடம் தேவைப்பட்டது.
மற்றொரு ஆட்டத்தில் முதல் நிலை வீரரான ரபெல் நடால், 6-ம் நிலை வீரரான மரின் சிலிச்சை எதிர்கொண்டார். இருவரும் முன்னணி வீரர்கள் என்பதால் போட்டி கடுமையாக இருந்தது. முதல் செட்டை நடால் 6-3 எனக் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 3-6 என இழந்தார். 3-வது செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் 7(7) - 6(5) என நடால் அந்த செட்டை கைப்பற்றினார். ஆனால் சிலிச் 4-வது செட்டை 6-2 எனக் கைப்பற்றினார்.
இதனால் முதல் நான்கு செட் முடிவில் இருவரும் தலா 2 செட்களை கைப்பற்றி சமநிலையில் இருந்தனர். வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டில் இருவரும் களமிறங்கினார்கள். இதில் சிலிச் 2-0 என முன்னிலையில் இருக்கும்போது நடால் காயத்தால் போட்டியில் இருந்து விலகினார். இதனால் சிலிச் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.