செய்திகள்

ஜி.எஸ்.டி. முறையை சீர்குலைக்க நடந்த முயற்சி தோல்வி: அமெரிக்காவில் அருண் ஜெட்லி பேச்சு

ஜி.எஸ்.டி. வரி முறையை சீர்குலைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. இந்த வரியை எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொண்டு விட்டன என்று அமெரிக்காவில் அருண் ஜெட்லி கூறினார்.

மாலை மலர்

வாஷிங்டன்:

ஜி.எஸ்.டி. வரி முறையை சீர்குலைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. இந்த வரியை எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொண்டு விட்டன என்று அமெரிக்காவில் அருண் ஜெட்லி கூறினார்.

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, ஒரு வார கால பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று காலை நியூயார்க் நகர் சென்றடைந்த அவர், அங்கு இந்திய தொழில் கூட்டமைப்பும், அமெரிக்க வர்த்தக சபையும் கூட்டாக ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அங்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அருண் ஜெட்லி கூறியதாவது:-

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறைக்கு இந்தியா சுமுகமாக மாறிவிட்டது. இந்த வரி முறையை சீர்குலைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர் பல முயற்சிகள் மேற்கொண்டனர்.

ஆனால் அவர்கள் கட்சியின் ஆட்சி நடக்கும் மாநிலங்களே அவர்கள் சொன்னதை கேட்கவில்லை. ஏனென்றால், 80 சதவீத வருவாய், மாநிலங்களுக்குத்தான் போகப் போகிறது. அதை இழக்க விரும்பாததால், கட்சி மேலிடம் சொல்வதை அவர்கள் நிராகரித்தனர். வேகமாக இந்த வரி முறைக்கு மாநிலங்கள் மாறிவிட்டன. அவை புத்திசாலிகள். அதனால், இதை சீர்குலைக்க நடந்த முயற்சி தோற்றுவிட்டது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில், 5 சதவீத வரி கூட உள்ளது. எந்த நாட்டிலும் இவ்வளவு குறைவான வரி சதவீதம் இல்லை. ரூ.1 கோடி வரை வர்த்தகம் செய்பவர்களுக்கு சிறப்பு திட்டம் அறிவித்துள்ளோம்.

இளைய தலைமுறையினர் மின்னணு முறையிலான பண பரிமாற்றத்துக்கு மாறிவிட்டனர். அரசின் பல்வேறு மானியங்கள், வங்கி கணக்கு மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளாக எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, வர்த்தகம் செய்வதற்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது. வரி குறித்த 99 சதவீத விசாரணைகள் ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. பெரிய முடிவுகளை எடுத்து, அதை பெரிய அளவில் அமல்படுத்தக்கூடிய திறன், இந்தியாவுக்கு உள்ளது.

சுமார் 250 நெடுஞ்சாலை திட்டங்கள், கட்டுமான நிலையில் உள்ளன. மின்சாரம் உபரியாக உள்ளது. துறைமுகங்களின் கையாளும் திறன் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அருண் ஜெட்லி பேசினார்.