கொள்ளை முயற்சி நடந்த மானூர் கூட்டுறவு சங்க அலுவலகத்தை படத்தில் காணலாம். 
செய்திகள்

கூட்டுறவு சங்கத்தில் கொள்ளை முயற்சி - லாக்கரை திறக்க முடியாததால் 300 பவுன் நகைகள் தப்பின

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கூட்டுறவு சங்கத்தில் நடந்த கொள்ளை முயற்சியில் லாக்கரை திறக்க முடியாததால் 300 பவுன் நகைகள் தப்பின.

மாலை மலர்

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மானூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மானூர், அண்ணாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பலர் தங்களது நகைகளை அடகு வைத்து கடன்களை பெற்றுள்ளனர்.

இந்தநிலையில் கூட்டுறவு சங்க பணியாளர் தண்டபாணி, அலுவலகத்தை திறப்பதற்காக நேற்று காலை வந்தார். அப்போது, பூட்டு உடைக்கப்பட்டு அலுவலகத்தின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது, சங்க அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள கம்பிவேலி உடைக்கப்பட்டிருந்தது. மேலும், பூட்டை உடைத்து சங்க அலுவலகத்தில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்தது தெரியவந்தது.

சங்க அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் முகமூடி அணிந்த 2 நபர்கள் பூட்டை உடைத்து சங்க அலுவலகத்துக்குள் நுழையும் காட்சி பதிவாகி இருந்தது. மேலும் அவர்கள் பணம், நகை உள்ள லாக்கரை உடைக்க முயற்சிப்பதும், அதனை உடைக்க முடியாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.

இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சங்க செயலாளர் கூறுகையில், லாக்கரை திறக்க முடியாததால், அதில் வைக்கப்பட்டிருந்த 300 பவுன் நகைகள் தப்பின என்றார்.