செய்திகள்

திருக்கோவிலூர் அருகே தாக்கப்பட்ட சிறுமியின் உடல்நிலை முன்னேற்றம்

திருக்கோவிலூர் அருகே தாக்கப்பட்ட சிறுமியின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மயங்கிய நிலையிலேயே இருந்து வந்த அவர் இப்போது கண்விழித்து பார்க்கிறார்.

மாலை மலர்

புதுச்சேரி:

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தில் இரவில் வீட்டில் படுத்திருந்த ஆராயி (வயது 46), அவரது மகள் தனம் (15), மகன் சமயன் (8) ஆகியோரை மர்ம கும்பல் தாக்கியது.

இதில் சமயன் உயிர் இழந்தான். மற்ற இருவரும் படுகாயத்துடன் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அவர்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிகிறது. இருவரும் சுய நினைவற்ற நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர். இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மூளை பகுதியில் சில பாதிப்புகள் உள்ளன.

இதன் காரணமாகத்தான் அவர்களுக்கு சுய நினைவு திரும்பாமல் உள்ளது. சிறுமி தனத்தின் உடல்நிலை தொடர்ந்து மோசம் அடைந்து வந்தது. அவருக்கு பல்வேறு ஆபரே‌ஷன்கள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது வரை கண் விழித்து பார்க்க முடியாமல் தொடர்ந்து மயங்கிய நிலையிலேயே இருந்து வந்தார். இப்போது கண்விழித்து பார்க்கிறார். சிறிது நேரம் பார்த்து விட்டு கண்ணை மூடி கொள்கிறார்.

உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதால் தான் கண் விழித்து பார்க்க முடிகிறது என்று டாக்டர்கள் கூறினார்கள். ஆனாலும், அவரால் பேச முடியவில்லை. உடல்நிலை சற்று தேறி இருப்பதால் அதி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதே போல்தான் அவரது தாயாருக்கும் சற்று உடல்நிலை தேறி இருக்கிறது. ஆனாலும், அவரால் கண்விழித்து பார்க்க முடியவில்லை.

அவரும் இப்போது ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இருவருக்கும் தொடர்ந்து டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

அவர்களை தாக்கியவர்கள் யார்? என்பது இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. சிறுமி தனம் பேச ஆரம்பித்து விட்டால் அதன் மூலம் முழுமையான விவரங்கள் தெரிய வரும். குற்றவாளிகளை கண்டு பிடிக்கவும் வாய்ப்பு ஏற்படும். #tamilnews