செய்திகள்

சுவிட்சர்லாந்து தம்பதியினர் மீது கொடூர தாக்குதல்: உ.பி அரசிடம் அறிக்கை கேட்கிறார் சுஷ்மா

ஆக்ராவுக்கு சுற்றுலாப் பயணம் வந்த சுவிட்சர்லாந்து தம்பதியினர் மீது உள்ளூர் கும்பல் கொடூர தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உ.பி அரசிடம் சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம் கேட்டுள்ளார்.

மாலை மலர்

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா அருகில் உள்ள பழமையான நகரமான பாடேஃபுர் சிக்ரி என்ற பகுதியில் கடந்த ஞாயிறு அன்று சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலா தம்பதியினர் மீது உள்ளூர் கும்பல் ஒன்று கொடூர தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து வெளிநாட்டு தம்பதியினர் புகார் அளிக்காத நிலையிலும், உள்ளூர் போலீசார் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முகுல் என்ற நபர்தான் இந்த தாக்குதலை தூண்டியது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள முகுலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட முகுலின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தாக்குதலில் காயமடைந்த தம்பதியினர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உத்தர பிரதேச மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளார்.

மத்திய சுற்றுலாதுறை மந்திரி அல்போன்ஸ் இந்த சம்பவம் குறித்து மாநில அரசிடம் தனது கவலைகளை தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுக்கு சுற்றுலா வரும் தங்களது நாட்டவர்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என சுவிட்சர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.