அத்திவரதர் 
செய்திகள்

அத்திவரதர் தரிசனத்துக்கு 5 லட்சம் பேர் திரண்டனர் - நெரிசலை சமாளிக்க சிறப்பு ஏற்பாடு

அத்திவரதர் தரிசனத்துக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருப்பதால் தினமும் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை மலர்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன விழா கடந்த மாதம் 1-ந்தேதி தொடங்கியது.

31-ந்தேதி வரை சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந்தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அத்தி வரதரை தரிசிக்க நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

அத்திவரதர் தரிசனம் சயன கோலத்தில் தொடங்கியது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்ட வண்ணம் இருந்தனர்.

காஞ்சிபுரம், சென்னை பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் படையெடுத்து வந்து அத்திவரதரை தரிசித்தனர். விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் காஞ்சிபுரம் பக்தர்கள் வெள்ளத்தால் திணறியது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

அத்திவரதர் தரிசனத்தின் 44-வது நாளான இன்று பச்சை நிற பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 3 நாட்களாக விடுமுறை என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து அத்திவரதரை தரிசித்தனர்.
நேற்று ஒரே நாளில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டதால் நான்கு மாட வீதிகள், டி.கே. நம்பித்தெரு ஆகிய இடங்களில் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் சுமார் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

அத்திவரதர் தரிசனம் வருகிற 16-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இன்னும் 4 நாட்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்பதால் காஞ்சிபுரத்தில் இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அதிகாலையிலேயே 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டிருந்தனர். நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் வரலாறு காணாத அளவுக்கு காணப்பட்டது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

பக்தர்கள் கூட்டத்தால் காஞ்சிபுரம் திக்குமுக்காடி வரும் நிலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும் தேவையான ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.

தரிசனத்துக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருப்பதால் தினமும் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த மட்டும் 11 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 4 போலீஸ் ஐ.ஜி.க்கள், 6 டி.ஐ.ஜி.க்கள், 30 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி காஞ்சிபுரத்தில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து வருகிறார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி கூறியதாவது:-

அத்திவரதர் தரிசனம் தொடங்கும்போது இந்து அறநிலையத்துறையினர் தினமும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பக்தர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்ப்பதாக கூறினர். போலீசார் தரப்பில் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்த்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் தரிசனம் தொடங்கியதில் இருந்தே 1 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்ததால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

கடந்த மாத இறுதியில் தினமும் 2 லட்சம் பக்தர்களுக்கு மேல் திரண்டனர். தற்போது 2½ லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தினசரி தரிசனம் செய்கின்றனர்.

இந்த அளவுக்கு பக்தர்கள் கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை. எனினும் தற்போது பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு அருகே பக்தர்கள் கூட்ட நெரிசலை தடுக்கவும், முக்கிய பிரமுகர்கள் வரிசையில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்துள்ளோம்.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த 8 இடங்களில் பக்தர்களை நிறுத்தி அனுப்ப உள்ளோம். ஒவ்வொரு இடத்திலும் 10 ஆயிரம் பக்தர்கள் வரை நிறுத்தி அனுப்பப்படுவார்கள். அதே நேரம் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் இலவசமாக வழங்கப்படும். கழிப்பிட வசதிகள், மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. டாக்டர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.

காத்து நிற்கும் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க வசதியாக எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பக்தர்கள் தரிசனத்துக்காக மாவட்ட நிர்வாகம் சார்பிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பொன்னையா கூறியதா வது:-

அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு பின்னர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்த பின்னர் சாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.

அதற்காக வந்தவாசி மற்றும் உத்திரமேரூர் சாலை வழியாக வரும் பக்தர்கள் காஞ்சிபுரம் அடுத்த கீழ் கதிர்ப்பூர் கிராமம் பிஏவி பள்ளி அருகிலும், சென்னை, அரக்கோணம் மற்றும் வேலூர் மார்க்கமாக வரும் பக்தர்கள் கீழ் கதிர்ப்பூர் அருகில் எஸ்.ஆர்.எம்.பெட்ரோல் பங்க் அருகிலும்,

தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கமாக வரும் பக்தர்கள் நத்தப்பேட்டை அருகில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியிலும் தங்க மிக பெரிய தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு தங்கும் பந்தலின் அருகில் உணவு சமைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்படும்.

அங்கு குடிநீர், சுகாதார வசதிகள் கழிவறை வசதி, மின்சார வசதி, இரவில் உறங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

டோனர் பாஸ் வைத்து உள்ளவர்கள் வரும் 15-ந்தேதி வரை அனுமதிக்கபடுவர். பொது தரிசனத்தில் வரும் பக்தர்கள் 16-ந்தேதி வரை அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்ய 16-ந்தேதி கடைசி நாள்.

முன்னரே அறிவித்தபடி 17-ந்தேதி ஆகம விதிப்படி அத்தி வரத பெருமாள் சடங்கு சம்பிரதாயங்கள் செய்யப்பட்டு கோவிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தில் உள்ளே வைக்கப்படுவார்.

நேற்று வரை 43 நாட்களில் சுமார் 80 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து உள்ளனர்.