செய்திகள்

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மீது அசாம் போலீஸ் வழக்கு

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மீது அசாம் மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் 153 (ஏ) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக கவுகாத்தி இணை போலீஸ் கமி‌ஷனர் கூறினார்.

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலம் அகமதுபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் மேற்கு வங்கத்தில் வசிக்கும் அசாம் மாநிலத்தவர்கள் பற்றி பேசினார். அவர் கூறியதாவது:-

அசாம் மாநிலத்தில் பணிபுரிந்து வரும் மேற்கு வங்க மாநில மக்களை, அங்கிருந்து வெளியேற்ற மத்திய அரசு சதி திட்டம் தீட்டியுள்ளது. இதற்காகவே மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, தேசிய குடிமக்கள் பதிவேட்டில் திருத்தம் கொண்டு வருகிறது.

கடந்த 31-ந்தேதி இது தொடர்பான வரைவு பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது. அதில் அசாம் மாநிலத்தில் உள்ள வங்க மொழி பேசும் மக்களின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. திட்டமிட்டு அவர்களை வெளியேற்ற முயற்சி நடக்கிறது.

இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

மம்தா பானர்ஜியின் இந்த பேச்சுக்கு அசாமில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தின்சுகியா, வில்வநாத் உள்பட பல இடங்களில் மம்தாவின் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டன.

இதற்கிடையே மம்தா பானர்ஜி மொழி ரீதியாக மக்களிடையே பகை உணர்ச்சியைத் தூண்டி விடுவதாக கவுகாத்தி ஐகோர்ட்டு வக்கீல் தைலேந்திரநாத் தாஸ், விவசாய அமைப்பின் தலைவர் பிரதீப் கலிதா இருவரும் போலீசில் புகார் செய்தனர். அந்த புகார்களை போலீசார் ஏற்றுக் கொண்டனர்.

அசாம் மாநில போலீசார் அந்த இரு புகார்களையும் ஒருங்கிணைத்து மம்தா பானர்ஜி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் 153 (ஏ) பிரிவின் கீழ் மம்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக கவுகாத்தி இணை போலீஸ் கமி‌ஷனர் ரஞ்சன் கூறினார்.

இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வழக்குப்பதிவு செய்து மம்தாவின் போராட்டத்தை தடுத்து விட முடியாது என்று திரிணாமுல் காங்கிரசார் கூறியுள்ளனர்.