செய்திகள்

ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற முன்னாள் மல்யுத்த வீரர் விபத்தில் மரணம்

1974-ம் ஆண்டு தெஹ்ரானில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றவ வீரர் சுக்செயின்சிங் சீமா சாலைவிபத்தில் பலியானார்.

மாலை மலர்

பாட்டியாலா:

1974-ம் ஆண்டு தெஹ்ரானில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் மல்யுத்தத்தில் பிரீஸ்டைல் மற்றும் கிரீகோ ரோமன் பிரிவுகளில் வெண்கலப்பதக்கம் வென்றவர் சுக்செயின்சிங் சீமா. பஞ்சாபை சேர்ந்த 67 வயதான சுக்செயின்சிங் சீமா பாட்டியாலாவில் மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். அவர் பாட்டியாலாவின் புறநகர் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு காரில் வீட்டுக்கு திரும்பிய போது எதிரே வந்த கார் மோதியதில் விபத்தில் சிக்கினார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். துரோணாச்சார்யா விருது பெற்ற சுக்செயின்சிங் பாட்டியாலாவில் உள்ள தேசிய பயிற்சி மையத்தில் 60 பேருக்கு மல்யுத்த பயிற்சி அளித்து வந்தார். இவருடைய மகன் பல்விந்தர்சிங்கும் மல்யுத்த வீரர் தான். ஒலிம்பிக்கில் பங்கேற்றவரான பல்விந்தர்சிங் 2002-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.