அலோர்செடார்:
ஆசிய பேட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் பிரிவில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, இந்தோனேசியாவை எதிர்கொண்டது.
முதல் ஒற்றையர் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்தும், 13-வது இடத்தில் இருக்கும் இந்தோனேசியாவின் ஜொனதன் கிறிஸ்டீயும் மோதினர். இதில் 21-17, 21-17 என்ற நேர் செட்டில் ஜொனதன் கிறிஸ்டீ வெற்றி பெற்றார்.
அதன்பின் நடைபெற்ற இரட்டையர் ஆட்டத்தில் சத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராஜ் ரெட்டியுடன் இணைந்து 18-21, 21-18, 24-22 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் மொகமது அஹ்சான், கெவின் சஞ்சயா சகுமுல்ஜோ ஜோடியை வீழ்த்தினார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஒற்றையர் போட்டியில், இந்தியாவின் சாய் பிரனீத்தும், இந்தோனேசியாவின் ஜிண்டிங் அண்டோனி சின்சுகாவும் விளையாடினர். இப்போட்டியில், 21-18, 21-19 நேர் செட்களில் சாய் பிரனீத் வென்றார். இதன்மூலம் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது.
மற்றொரு இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் அர்ஜூன், ஷ்லோக் ராம்சந்திரன் ஜோடி, இந்தோனேசியாவின் அங்கா பிரதமா, ரியான் ஆகுங் சபுட்ரோ ஜோடியிடம் 14-21, 21-16, 21-12 என்ற செட்களில் தோல்வியடைந்தது. இதனால் ஆட்டம் மறுபடியும் 2-2 என சமனானது.
மூன்றாவது ஒற்றையர் பிரிவு போட்டியில் சுமீத் ரெட்டியும், இந்தோனேசியாவின் இசான் மவுலானா முஸ்தபாவும் மோதினர். இதில் 21-12, 21-7 என்ற நேர் செட்களில் இந்தோனேசியா வீரர் வெற்றி பெற்றார். இதன்மூலம் இந்தோனேசியா 3-2 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
நேற்று நடைபெற்ற பெண்கள் பிரிவு ஆட்டத்தில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் ஜப்பான் அணியிடம் தோல்வியடைந்தது. நாளை நடைபெறும் போட்டிகளில் இந்திய பெண்கள் அணி இந்தோனேசியாவை எதிர்கொள்ள இருக்கிறது. #AsianBadmintonChampionships #Indiamen