புவனேஸ்வரம்:
22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் இன்று தொடங்கி 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள். இந்தியாவில் இந்த போட்டி நடப்பது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 1989-ம் ஆண்டில் டெல்லியிலும், 2013-ம் ஆண்டில் புனேயிலும் நடந்துள்ளது.
முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே நடைபெறுகிறது. கலிங்கா ஸ்டேடியத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமான தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலாசார நிகழ்ச்சி மட்டும் 40 நிமிடங்கள் இடம் பெறுகிறது. அணிவகுப்பில் இந்திய அணிக்கு ஒடிசா ஓட்டப்பந்தய வீராங்கனை ஸ்ரபானி நந்தா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். ‘ஆசிய தடகளத்தின் தொடக்க விழா நடக்கும் ஜூலை 5-ந்தேதி ஒடிசா மாநிலத்தின் வரலாற்று சிறப்பு மிக்க நாளாக இருக்கும்’ என்று அந்த மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் கூறியுள்ளார். இதையொட்டி புவனேஸ்வரத்தில் இன்று அனைத்து அலுவலகங்களுக்கும் அரைநாள் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் 95 வீரர், வீராங்கனைகள் அங்கம் வகிக்கிறார்கள். இது குறித்து இந்திய தடகள சம்மேளன தலைவர் அடிலே சுமரிவாலா கூறுகையில், ‘சீனாவில் 2015-ம் ஆண்டு நடந்த போட்டியில் 4 தங்கம் உள்பட 13 பதக்கங்களை வென்றோம். இந்த முறை நிச்சயம் அதை விட கூடுதலாக பதக்கம் வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), அனு ராணி (ஈட்டி எறிதல்), அங்கித் ஷர்மா (நீளம் தாண்டுதல்), சுதா சிங் (ஸ்டீபிள் சேசிங்), நிர்மலா (ஓட்டப்பந்தயம்) என்று திறமைசாலிகள் நிறைய பேர் நமது அணியில் இருக்கிறார்கள்’ என்றார்.