செய்திகள்

ஆசியான் அமைப்பை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் குடியரசு தினவிழாவில் பங்கேற்பு

ஆசியான் அமைப்பை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்களை குடியரசு தின விழாவில் பங்கேற்க செய்ய இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

புதுடெல்லி:

குடியரசு தினவிழாவில் ஆண்டு தோறும் வெளி நாட்டு தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது வழக்கம் ஆனால் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 26-ந் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் ‘ஆசியான்’ அமைப்பை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

‘ஆசியான்’ கூட்டமைப்பில் தென் கிழக்கு ஆசிய நாடுகளான புருனே, இந்தோனேசியா, கம்போடியா, மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 10 நாடுகள் உள்ளன.

அந்த நாடுகளின் தலைவர்கள் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கி விட்டன. அதற்கான அழைப்பிதழ்கள் அனைத்து ஆசியான் தலைவர்களுக்கும் அனுப்பபட்டு வருகிறது.

குடியரசு தின விழாவை தொடர்ந்து ஸ்பெ‌ஷல் இந்தியா- ஆசியான் மாநாடு நடக்கிறது. அதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார்.

தெற்கு ஆசிய நாடுகளுடன் ஆன உறவை மேம்படுத்த இந்தியா விரும்புகிறது. அதே நேரத்தில் இந்த நாடுகளுடன் சீனா தனது ஆதிக்கத்தையும், செல்வாக்கையும் மேம்படுத்த துடிக்கிறது.

அதை தடுக்கும் நடவடிக்கையாக ஆசியான் நாடுகளின் தலைவர்களை குடியரசு தின விழாவில் பங்கேற்க செய்ய இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.