ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையம் அருகே ஹம்காமாவில் ராணுவ முகாம் உள்ளது. எல்லை பாதுகாப்பு படையின் 182 பட்டாலியன் முகாமான இந்த ராணுவ கட்டிடத்தில் வீரர்கள் இருந்தனர். இன்று அதிகாலை 3.45 மணியளவில் பயங்கர ஆயுதங்களுடன் தற்கொலை படை தீவிரவாதிகள் 3 முதல் 4 பேர் திடீரென ராணுவ முகாம் மீது அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்கள் ராணுவ முகாம் கட்டிடத்தை சுற்றி வளைத்து வீரர்களை நோக்கி கண் மூடித்தனமாக தாக்கினார்கள்.
தற்கொலை படை தீவிரவாதிகளின் இந்த தாக்குதலை ராணுவ வீரர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் உடனடியாக சுதாரித்துக் கொண்டு பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படை வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே இடைவெளி இல்லாமல் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 3 தீவிரவாதிகள் ராணுவ முகாமின் கட்டிட வளாகத்துக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
பாதுகாப்புபடை வீரர்களின் தாக்குதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். அவனது உடல் ராணுவ முகாமின் காம்பவுண்டில் கிடந்தது. அவன் யார் என்ற விவரம் தெரியவில்லை. சிறிது நேரத்தில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். அதை தொடர்ந்து 3-வது தீவிரவாதி ஒருவனும் சுட்டுக் கொல்லப்பட்டான்.
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பலியானார். 4 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஒரு தீவிரவாதி பதுங்கி இருப்பதாக தெரிகிறது. இதனால் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பின் ‘அப்சல்குரு படை’ இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய ராணுவ முகாம் பாதுகாப்பு நிறைந்த பகுதியாகும். இங்கு தற்கொலை படை தாக்குதல் சம்பவத்தை யாருமே எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். உச்சகட்ட பாதுகாப்பையும் மீறி தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த பகுதியில் தான் எல்லை பாதுகாப்பு படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களுக்கான பயிற்சி மையங்கள் உள்ளன.
தற்கொலை படை தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதி மற்றும் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதிவிரைவு படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் ஏராளமான பயணிகள் சாலைகளில் காத்து கிடந்தனர்.
விமான நிலையம் செல்ல பொது மக்களுக்கு அனுமதியும் மறுக்கப்பட்டது. விமான நிலையத்தை சுற்றியுள்ள பள்ளிகள் மூடப்பட்டன. சில மணி நேரங்களில் விமான சேவை தொடங்கின.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் டெல்லியில் உயர்மட்ட குழுவினருடன் அவசர ஆலோசனை நடத்தினார்.