ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போது அதிபராக உள்ள அஷ்ரப் கானி போட்டியிட்டார்.
அதில் அதிபர் அஷ்ரப் கானி 9 லட்சத்து 23 ஆயிரத்து 868 (50.64 சதவீதம்) வாக்குகளை வாங்கி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா அப்துல்லா 39.52 சதவீதம் வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார்.
ஆனால், இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகவும் ஆகையால் தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என அப்துல்லா அப்துல்லா சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது முறையாக எண்ணப்பட்ட வாக்குகளிலும் 50.64 சதவீதம் வாக்குகளை பெற்று அஷ்ரப் கானி வெற்றி பெற்றதாக ஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணையம் 18-2-2020 அன்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.
இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற அஷ்ரப் கானி இன்று ஆப்கானிஸ்தான் அதிபராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.
அந்நாட்டு அரசின் உயரதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு தூதர்கள் முன்னிலையில் நடந்த பதவியேற்பு விழாவில் 'இந்த நாட்டின் இறையாண்மையை மதித்து பாதுகாப்பதுடன் புனிதமான இஸ்லாமிய மதத்துக்கு கீழ்படிந்து பாதுகாப்பேன் என அல்லாஹ்வின் பெயரால் உறுதியேற்கிறேன்’ என பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.
அஷ்ரப் கானியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவிய வேட்பாளரான அப்துல்லா அப்துல்லாவும் காபுல் நகரில் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் ஆப்கானிஸ்கான் அதிபராக பதவி ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.
‘ஆப்கானிஸ்தானின் சுதந்திரம், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை பாதுகாப்பேன்’ என அப்துல்லா அப்துல்லா உறுதியேற்றார்.
இந்த இரு பதவி ஏற்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்ற அதே வேளையில் காபுல் நகரில் இரு சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.