அதிபர் பதவியை தக்கவைத்துக்கொண்ட அஷ்ரப் கானி 
செய்திகள்

ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் அஷ்ரப் கானி வெற்றி - தேர்தல் ஆணையம்

தேர்தல் நடைபெற்று 5 மாதங்களுக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் அஷ்ரப் கானி வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

மாலை மலர்

காபுல்: 

ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போது அதிபராக உள்ள அஷ்ரப் கானி போட்டியிட்டார். 

அவரை எதிர்த்து முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா அப்துல்லா போட்டியிட்டார். வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த டிசம்பர் மாதம் 22-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 

அதில் அதிபர் அஷ்ரப் கானி 9 லட்சத்து 23 ஆயிரத்து 868 (50.64 சதவீதம்) வாக்குகளை வாங்கி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா அப்துல்லா 39.52 சதவீதம் வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார். 

ஆனால், இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகவும் ஆகையால் தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என அப்துல்லா அப்துல்லா சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, செபடம்பர் மாதம் அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் பணியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. 

இந்நிலையில், இரண்டாவது முறையாக எண்ணப்பட்ட வாக்குகளிலும் 50.64 சதவீதம் வாக்குகளை பெற்று அஷ்ரப் கானி வெற்றி பெற்றதாக ஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதனால், அஷ்ரப் கானி இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அதிபர் பதவியை தக்கவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.