மராட்டியத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது. விரைவில் சட்டமன்ற தேர்தலும் நடக்க உள்ளதால், அந்த கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆளும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளுக்கு அணி மாறி வருகின்றனர்.
எதிர்க்கட்சி தலைவரான ராதாகிருஷ்ண விகே பாட்டீல் (காங்கிரஸ்) சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்து மந்திரியானார்.
இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நேற்று முன்தினம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தனர்.
இந்தநிலையில், தொடர்ந்து தங்கள் கட்சியினரை இழுத்து வரும் பா.ஜனதாவை மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் அசோக் சவான் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நிரம்பி வழியும் கப்பல் என்னவாகும் மூழ்கிவிடும். அதுபோல தான் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களை இழுத்துக்கொள்ளும் பா.ஜனதாவில் சந்தர்ப்பவாதிகள் நிரம்பி வழிகிறார்கள். அந்த பா.ஜனதா கப்பல் மூழ்கி விடும். இது உறுதி.
சந்தர்ப்பவாதிகள் கட்சியில் இருந்து வெளியேறியுள்ளதால் காங்கிரசில் காலியிடம் ஏற்பட்டு உள்ளது. இதில் புது மற்றும் திறமை வாய்ந்தவர்கள் நிரப்பப்படுவார்கள்.
காங்கிரசின் உண்மையான பலம் தொண்டர்கள் தான். அது கட்சியை விட்டு வெளியேறிய தலைவர்களால் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிலையில், விவசாயிகளுக்கு 33 சதவீத பயிர் காப்பீடு தொகை மட்டுமே வழங்கப்பட்டு இருப்பது குறித்து மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடிதம் எழுத இருப்பதாக கூறப்பட்டது.