செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து வெற்றியுடன் விடைபெற்றார் ஆஷிஷ் நெஹ்ரா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து வெற்றியுடன் விடைபெற்றார்.

மாலை மலர்

இந்திய வேகப்பந்து வீச்சாளர் 38 வயதான ஆஷிஷ் நெஹ்ரா சொந்த ஊர் ரசிகர்கள், உறவினர்களின் முன்னிலையில் வெற்றியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நேற்று ஓய்வு பெற்றார். நேற்றைய ஆட்டத்தில் முதலாவது ஓவரையும், கடைசி ஓவரையும் வீசும் கவுரவத்தை பெற்ற நெஹ்ராவுக்கு ஒரு விக்கெட்டும் கிடைக்கவில்லை. அவரது பந்து வீச்சில் காலின் முன்ரோ கொடுத்த கேட்ச் வாய்ப்பை பாண்ட்யா வீணடித்து விட்டார்.

அவர் பந்து வீச வந்த போதெல்லாம் ரசிகர்கள் பதாகைகளை காட்டியும், கரகோஷம் எழுப்பியும் ஊக்கப்படுத்தினர். ஆட்டம் முடிந்ததும் மைதானத்தை வலம் வந்த நெஹ்ராவை, சக வீரர்களும், சக மாநில வீரர்களுமான (டெல்லி) விராட் கோலியும், ஷிகர் தவானும் சிறிது நேரம் தோளில் தூக்கி சுமந்தனர். அதன் பிறகு அனைவரும் உற்சாகமாக குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

1999-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்த நெஹ்ரா இதுவரை 27 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இது தவிர 17 டெஸ்ட், 120 ஒரு நாள் போட்டிகளிலும் பங்கேற்று இருக்கிறார். முன்னதாக அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நினைவுப்பரிசை கோலியும், டோனியும் வழங்கினர். டெல்லி கோட்லா மைதானத்தில் பந்து வீசும் பகுதியில் ஒரு முனைக்கு நெஹ்ராவின் பெயரை சூட்டி டெல்லி கிரிக்கெட் சங்கம் அவரை கவுரவப்படுத்தியுள்ளது.

நேற்றைய போட்டிக்கு பின்னர் நெஹ்ரா பேசியதாவது:-

கிரிக்கெட் விளையாடுவதால் கிடைக்கும் மகிழ்ச்சிகள் அனைத்தையும் இனி நான் இழப்பேன். ஆனால் ஒரு விஷயம், இனி என் உடல் அமைதியாக இருக்கும். நான் இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவேன் என்று கூறியிருந்தேன். ஆனால் ஓய்வுபெற இதுபோன்ற ஒரு நல்ல நேரம் கிடைக்காது.

இந்திய அணியில் அதிக முறை கடைசி ஓவர் வீச அழைக்கப்பட்டது நானாக தான் இருக்கும். ஆனால் முன்னர் அது வேறு மாதிரி இருந்தது. இன்று எந்த பிரச்சனையும் இல்லை.

இங்கு 1997-ம் ஆண்டு எனது முதல் போட்டியில் களமிறங்கினேன். விதிமுறைகள் மாற்றப்பட்டு பல ரன்கள் எடுக்கப்பட்டுள்ளன. என்ன நடந்தாலும், இந்த அணி தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்திய அணியின் எதிர்காலம் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பத்திரமான கைகளில் உள்ளது.

நான் பல கேப்டன்களின் தலைமையில் விளையாடியுள்ளேன், அது நினைவுகூறத்தக்க பயணமாக அமைந்துள்ளது. நான் இதை வீரூ(சேவாக்)கிற்கும் கூறுகுறேன், அவர் பல ரன்கள் எடுத்திருந்தாலும், இன்னும் மக்கள் அவரை முல்தானின் சுல்தான் என்று தான் அழைக்கிறார்கள். சில நேரங்களில் மோசமான பந்திலும் விக்கெட்கள் கிடைக்கும், ஆனால் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக நீங்களே உங்களை சரிசெய்து கொள்வது அவசியமானது. நான் கடைசியாக 25 வயதில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடினேன். 18 ஆண்டுகள் நீல உடை அணிந்து கிரிக்கெட் விளையாடிய எனக்கு கடைசி போட்டியிலும் நீல உடை அணிந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை தவிர நான் வேறு எதையும் கேட்க முடியாது. எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் மகிழ்ச்சியாக ஓய்வு பெறுவேன்.