கைது 
செய்திகள்

ஆசாரிபள்ளத்தில் இன்று போலீசாரை கத்தியால் குத்திய கஞ்சா கும்பல்- ஒருவர் கைது

ஆசாரிபள்ளத்தில் இன்று போலீசாரை கத்தியால் குத்திய கஞ்சா கும்பலில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

நாகர்கோவில்:

ஆசாரிபள்ளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாகவும், அதனை தடுக்க முயன்றவர்களை தாக்குவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கஞ்சா விற்பனை கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை அமைக்கப்பட்டு ஆசாரிபள்ளம் பகுதியில் சுற்றிதிரியும் கஞ்சா கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக தனிப்படை போலீஸ் ஏட்டு வீரமணி, விஜயகுமார் மற்றும் சிவாஜி ஆகியோர் கொண்ட குழு ஆசாரிபள்ளம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஆசாரிபள்ளத்தை சேர்ந்த அஜித் (வயது 29 ) மற்றும் அவரது நண்பர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனே அந்த கும்பல் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு தப்பியோடினர்.

அவர்களை போலீசார் மூவரும் விரட்டி சென்றனர். ஒரு முட்டு சந்தில் அஜித்தையும், அவரது நண்பரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். போலீசாரை அஜித் மற்றும் அவரது நண்பர் சேர்ந்து கத்தியால் குத்தினர். மேலும் சரமாரியாக தாக்கவும் செய்தனர்.

இதில் போலீஸ் ஏட்டுக்கள்வீரமணி, சிவாஜி இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் போலீசாரின் பிடியில் அஜித் மட்டும் சிக்கினார். அவரது நண்பர் தப்பியோடிவிட்டார்.

பிடிப்பட்ட அஜித்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே அஜித் பிடிப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது நண்பர்கள் உள்பட கஞ்சா கும்பல் தப்பியோடி தலைமறைவாகி விட்டனர்.

கைதான அஜித் மீது நாகர்கோவில் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளது. கஞ்சா விற்பனை செய்ததாகவும், தடுத்தவர்களை தாக்கியதாகவும் வழக்குகள் உள்ளது.

நாகர்கோவிலில் இதற்கு முன்பு பஸ் நிலைய பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர். அதன்பின்பு வடசேரி மற்றும் புறநகர் பகுதிகளிலும் போலீசார் கஞ்சா கும்பலை வளைத்து பிடித்து நடவடிக்கை எடுத்தனர். இப்போது ஆசாரிபள்ளம் பகுதியில் போலீசாரை கஞ்சா கும்பல் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த கும்பலை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.