சாம்பாரில் கிடந்ததாக கூறப்படும் பல்லி வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. 
செய்திகள்

அம்மா உணவகத்தில் சாம்பாரில் பல்லி கிடந்ததாக பரபரப்பு: சுகாதார அதிகாரிகள் நேரில் விசாரணை

ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அம்மா உணவகத்தில் சாம்பாரில் பல்லி கிடந்ததாக கூறப்பட்ட புகாரை அடுத்து சுகாதார அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.

மாலை மலர்

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி காலையில் இட்லி சாம்பார், மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் 150 பேர் சாப்பிடும் வகையில் உணவு தயாரிக்கப்படுகிறது.

ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தங்கியிருக்கும் உறவினர்கள் உணவுகளை வாங்கி சாப்பிடுவது வழக்கம்.

இன்று காலை நோயாளியுடன் தங்கியிருந்த பெண் ஒருவர் அம்மா உணவகத்துக்கு சென்று இட்லி, சாம்பார் வாங்கிச் சென்று அதனை சாப்பிட்டார்.

அப்போது சாம்பாரில் பல்லி ஒன்று இறந்து கிடந்ததாகவும், அதனால் தனக்கு வாந்தி ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதை கேட்டதும் மற்ற நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அம்மா உணவகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய காட்சி.

உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கர நாராயணன், நகராட்சி நகர் நல அதிகாரி வினோத் ராஜா, டீன் கண்ணன் ஆகியோர் உடனடியாக அம்மா உணவுகத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்கு காலை உணவு முழுவதுமாக விற்று தீர்ந்தது தெரியவந்தது. அதேசமயம் ஒருவரை தவிர வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதும் தெரியவந்தது.