245 இருக்கைகளை கொண்ட பாராளுமன்ற மாநிலங்களவைக்கு பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் 12 பேர் கவுரவ உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். மீதி 233 பேர் அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் எம்.பி.க்களாக தேர்வு செய்து அனுப்பப்படுகின்றனர்.
அவ்வகையில், மாநிலங்களவை உறுப்பினர்களாக தற்போது பதவி வகித்துவரும் மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, ரவி சங்கர் பிரசாத், ஜே.பி.நட்டா, தர்மேந்திர பிரதான், தாவர்சந்த் கேலாட், ராம்தாஸ் அத்வாலே உள்பட 57 எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், 16 மாநிலங்களில் இருந்து 57 புதிய உறுப்பினர்களை மாநிலங்களவைக்கு தேர்வு செய்ய மார்ச் 23-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய மார்ச் 12 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட 57 உறுப்பினர்களை தவிர, கடந்த டிசம்பர் மாதம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த வீரேந்திர குமாரின் இடத்துக்கு மேலும் ஒரு உறுப்பினரை தேர்வு செய்யவும் இதே நாளில் இடைத்தேர்தல் நடைபெறும் என மத்திய தேர்தல் ஆணையம் இன்றிரவு அறிவித்துள்ளது.
இந்நிலையில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து 10 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்யலாம். பா.ஜ.க. சார்பில் 8 பேரை தேர்வு செய்யலாம் என்ற நிலையில் வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாளான இன்று மாலைக்குள் மேலும் 7 பா.ஜ.க. பிரமுகர்கள் இங்கிருந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.