செய்திகள்

சிறுமுகை அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது

சிறுமுகை அருகே குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை:

கோவை சிறுமுகை பகதூர் காலனியை சேர்ந்தவர் ரங்கராஜ்(வயது 47). கூலி தொழிலாளி. இவரது மனைவி சுதா (35). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

கடந்த 16-ந் தேதி சுதாவின் தந்தை உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் சுதா சொக்கத்தம்பள்ளியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். ரங்கராஜ் அங்கு செல்ல வில்லை.நேற்று ரங்கராஜ் மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியை வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.

ஆனால் சுதா 16 நாள் கழித்து தான் வீட்டுக்கு வருவேன் என கூறியதாக தெரிகிறது. இதனால் ஆவேச மடைந்த ரங்கராஜ் அரிவாளால் மனைவியை வெட்டினார். இதனால் சுதா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின்பே ரில் சிறுமுகை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். இன்ஸ்பெக்டர் செல்வராஜ் விசாரணை நடத்தி ரங்கராஜை மீது கொலை முயற்சி வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தார்.