ஆத்தூர்:
கொரோனா வைரஸ் பரவலால், தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சில வாரங்களாக, டாஸ்மாக்கடைகள், பார்கள் அடைக்கப்பட்டுள்ளன. மது பிரியர்கள், குக்கிராமங்களில் கிடைக்கும் கள்ளச்சாராயத்திற்காக விதிமீறி வாகனங்களில் அலைகின்றனர். இவற்றை கட்டுப்படுத்த, போலீசாரும் கள்ளச்சாரா வழக்கில் பலரை கைது செய்வது, பறிமுதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், செம்பட்டி அருகே சித்தையன்கோட்டை ஜான்தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளியான மாற்றுத்திறனாளி மகேந்திரன் (வயது 25) என்பவர் உறவினர் ஈமக்கிரியைக்காக, அணைப்பட்டி சென்றிருந்தார். அன்று மதியம் வீடு திரும்பிய மகேந்திரன், நண்பர்கள் சார்பில், நரசிங்கபுரம் தனியார் தோட்டத்தில் நடந்த கறி விருந்தில் கலந்து கொண்டு, நண்பர்கள் வாங்கி கொடுத்த நரம்பு தளர்ச்சி மாத்திரை மற்றும் போதை தன்மை கொண்ட மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார்.
பின்னர், கறி உணவு சாப்பிட்டுவிட்டு மாலையில் வீட்டிற்கு வந்த மகேந்திரன் திடீர் என மயங்கி சுருண்டு விழுந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைய டுத்து மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மது குடித்ததாக கூறி மயங்கிய அவரிடம், விபரத்தை பெற முடியாமல் போலீசார் தவித்தனர். மாவட்ட போலீஸ் எஸ்.பி., சக்திவேல் உத்தரவின்பேரில், ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி., சீமைச்சாமி, மதுவிலக்கு டி.எஸ்.பி., பொன்னுச்சாமி, கொரோனா பிரிவுக்கான சிறப்பு டி.எஸ்.பி., சரவணன் ஆகியோரை கொண்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
மகேந்திரன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, போதைக்காக நரம்புத்தளர்ச்சி மற்றும் போதை தன்மை கொண்ட மாத்திரைகளை மொத்தமாக வாங்கி தின்றது உறுதியானது. அதிக மாத்திரை பயன்படுத்தியதால், மகேந்திரன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார். மாத்திரைகள் விற்பனை செய்த சித்தையன்கோட்டை, செம்பட்டி பகுதி மருந்துகடை விற்பனையாளர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், மகேந்திரனுடன் சேர்ந்து மாத்திரைகளை தின்ற நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதில், மாத்திரை வாங்கிக்கொடுத்த, சித்தையன்கோட்டை சின்னு மகன் சூர்யா (20) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.