அம்மாபேட்டை:
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள கீழகோவில்பத்து உடையார் கோவில் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசிம்மன் (வயது38). அ.தி.மு.க. பிரமுகர். கீழகோவில்பத்து ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர். இவர் தற்போது வடபாதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராக பதவி வகித்து வந்தார்.
ராஜசிம்மன் 4 நாட்களுக்கு முன் தனது நண்பருடன் உடையார்கோவிலில் இருந்து சாலியமங்கலம் வழியாக திருபுவனம் கிராமத்துக்கு காரில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் வந்த மர்ம நபர்கள் 6 பேர் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.
இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் ராஜசிம்மன் கொலை தொடர்பாக வலங்கைமான் அருகே முள்ளியூரை சேர்ந்த செல்வகுமார் (35), தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (35), மன்னார்குடி அருகே காளவாய்க்கரையை சேர்ந்த மாரிமுத்து (29) ஆகிய 3 பேர் வேதாரண்யம் கோர்ட்டில் சரண் அடைந்திருந்தனர்.
இந்நிலையில் செங்குட்டுவன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அம்மாபேட்டை அருகே பல்லவராயன்பேட்டை பகுதியில் நின்றிருந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.
இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் அம்மாபேட்டை ஜோதி காலனியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ராஜா (என்ற) சண்முகராஜா(வயது24) என்பதும், மற்றொருவர் அதே பகுதி எழுத்து பட்டறை தெருவை சேர்ந்த பழனியப்பன் மகன் மணிகண்டன் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் 2 பேருக்கும் ராஜசிம்மன் கொலை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து இருவரையும் கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி ராஜசேகர் வழக்கை விசாரித்து 2 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேரும் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.