திருப்பூர்:
திருப்பூர் அனுப்பர் பாளையத்தை சேர்ந்தவர் அருண். இவர் அதே பகுதியை சேர்ந்த சந்துரு என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரூ.30 ஆயிரம் கடன் கொடுத்தார். அதன் பிறகு அந்த பணத்தை சந்துரு வட்டியுடன் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
கடன் வாங்கும் போது சந்துரு காசோலை ஒன்றை கொடுத்தார். கடனை திருப்பி செலுத்திய பின்பு அந்த காசோலையை கேட்டுள்ளார். அதற்கு அருண் மேலும் ரூ.10ஆயிரம் கட்டவேண்டும் அப்போது தான் காசோலையை தரமுடியும் என கூறினார். இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அருணுக்கு ஆதரவாக காதர்பேட்டை பகுதியை சேர்ந்த சையது முகமது இக்ரம் (22), நொய்யல் வீதியைச் சேர்ந்த சம்சுதீன் (22) ஆகியோர் சந்துருவுக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்தனர்.இது தொடர்பாக சந்துரு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்தார். அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் கொலை மிரட்டல் விடுத்த 2 பேரையும் தேடி வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரையும் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
அவர்களிடம் சோதனை செய்த போது அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் இருவர் மீதும் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.