தேனியில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:-
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மாநில அரசே விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து தமிழக அமைச்சரவை கூடி 7 பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பினர்.
நானும் நேரடியாக கவர்னரை சந்தித்து இதுகுறித்து கோரிக்கை வைத்தேன். அவர் உடனடியாக பரிந்துரை செய்வதாக கூறினார். ஆனால் 5 மாதங்கள் ஆகியும் அந்த கோப்பில் கையெழுத்திடாமல் உள்ளார்.
இந்த விஷயத்தில் கவர்னருக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என தமிழக சட்டத்துறை அமைச்சர் கூறுகிறார். கவர்னர் ஏன் தாமதிக்கிறார்? அவர் யார் கட்டுப்பாட்டில் உள்ளார்? என்பது தெரியவில்லை.
ஏற்கனவே விடுதலையை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த 7 பேரும் மீண்டும் காத்திருப்பது கொடுமையானது. காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளின் எதிர்ப்பால் விடுதலை அறிவிப்பு சாத்தியமின்றி போனது. 19 வயதில் சிறைக்குச் சென்ற என் மகனுக்கு தற்போது 47 வயதாகிறது.