அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (NIA) உருவாக்கிய, இணையவழி தாக்குதல் கருவிகளை பயன்படுத்தி உலகின் சுமார் 150 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ‘ரான்சம்வேர்’ வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க அந்தந்த நாட்டு அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இவ்வாறு வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் கருவிகளில், நாம் சேமித்து வைத்திருக்கும் தகவல்கள் அனைத்தையும் இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் பயனர்களின் பல்வேறு தகவல்களின் மூலம் வேகமாக பரவி வருகிறது. எனவே வான்னகிரை (Wannacry) என்ற பெயருடன் வரும் எந்தவிதமான தகவலையும் திறக்கவோ, படிக்க முயற்சிக்கவோ வேண்டாம். இந்த பெயருடைய நிரல்களை திறக்கும் போது, நமது தகவல்கள் அனைத்தையும் அந்த வைரஸ் அழித்து விடுகிறது.
இவ்வாறாக குஜராத் மாநிலத்தில் ஒரே இணைப்பில் இருந்த அரசு பயன்பாட்டில் உள்ள சுமார் 120 கணினிகள் ரான்சம்வேர் வைரஸ் மூலம் பாதிப்புள்ளாகி இருப்பதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். பாதிப்புக்குள்ளான கணினிகளில் இருந்த தகவல்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. எனினும் அந்த கணினிகளில் முக்கியமான தகவல் ஏதும் இல்லை என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் செயலாளர் தனஞ்ஜெய் திவேதி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கணினிகளும் அணைக்கப்பட்டுள்ளன. கலெக்டர் அலுவலக பணிகளும் முடக்கிவிடப்பட்டுள்ளது என்று குஜராத்தின் மெஹ்சானா மாவட்ட கலெக்டர் அலோக் பாண்டே தெரிவித்தார்.