செய்திகள்

இளம்பெண் மதம் மாறி திருமணம் செய்தது செல்லாது: ராணுவ வீரர் வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு

கேரளாவில் பெற்றோர் அனுமதியின்றி மதம் மாறி இளம்பெண் திருமணம் செய்தது செல்லாது என்று ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்த வைக்கம் பகுதியை சேர்ந்தவர் அசோகன். ஓய்வுபெற்ற ராணுவ வீரர்.

இவரது மகள் அகிலா (வயது 24). இவர் சேலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த ஆண்டு அகிலா திடீரென மாயமானார். இதுபற்றி அசோகன் பெருந்தல்மன்னா போலீசில் புகார் செய்தார். போலீசாரால் அகிலாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவே அகிலாவின் தந்தை அசோகன் கேரள ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் சேலத்தில் படித்து வந்த தன் மகளை அவருடன் படித்த சிலர் கடத்தி சென்று வேறு மதத்திற்கு மாற்றிவிட்டனர். அவர்களுடன் என் மகள் தங்கியுள்ளார். அவரை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இம்மனுவை விசாரித்த கோர்ட்டு, இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அகிலாவை கண்டு பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. போலீசார் அகிலாவை தேடிவந்த நிலையில் அகிலா, கோர்ட்டில் ஆஜரானார்.

அப்போது அவர் நீதிபதி முன்பு சொந்த விருப்பத்தின் பேரிலேயே மதம் மாறியதாகவும், இப்போது அறக்கட்டளை ஒன்றில் தங்கியிருப்பதாகவும் கூறினார். அவரது கருத்தை கோர்ட்டு பதிவு செய்து கொண்டதோடு அகிலாவை அவர் விருப்பப்படி செல்ல அனுமதித்தது.

இதையடுத்து அகிலாவின் தந்தை அசோகன் மீண்டும் கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தன் மகளை தீவிரவாத இயக்கத்தில் சேர்க்க முயற்சி நடக்கிறது. மதம் மாற்றி திருமணம் செய்தவர்கள் அவரை சிரியாவுக்கு கடத்தி செல்ல முயற்சிப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நடந்து கொண்டிருந்தபோது அகிலா மீண்டும் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது அவர் வாலிபர் ஒருவருடன் தனக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், திருமணத்தை பதிவு செய்ய அப்பகுதியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் பணம் செலுத்தியதற்கான ரசீதையும் கோர்ட்டில் சமர்ப்பித்தார்.

ஆனால் இத்திருமணத்தை ஏற்க கோர்ட்டு மறுத்தது. வழக்கு விசாரணையில் இருக்கும்போது எப்படி திருமணம் செய்யலாம் என்று அகிலாவுக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் இத்திருமணத்தை பதிவு செய்யக்கூடாது என்று பஞ்சாயத்து செயலாளருக்கும் உத்தரவு பிறப்பித்தது. மேலும் அகிலாவை எர்ணாகுளம் மகளிர் காப்பகத்துக்கு அனுப்பவும் உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த விசாரணை நேற்று நடந்தது. இதில் அகிலாவின் திருமணத்தை ரத்து செய்வதாக கோர்ட்டு அறிவித்தது.

இது தொடர்பாக கோர்ட்டு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பெற்றோர் சம்மதத்துடன்தான் ஒரு பெண்ணின் திருமணம் நடைபெற வேண்டும். ஆனால் இந்த வழக்கில் அகிலா பெற்றோரின் அனுமதியின்றி திருமணம் செய்துள்ளார். இது சட்டப்படி செல்லாது.

இந்த திருமணத்தை அகிலாவுக்கு துணையாக இருந்த சைனபா மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் செய்து வைக்க எந்த உரிமையும் இல்லை. எனவே இத்திருமணம் செல்லாததாகிறது. அகிலாவை அவரது பெற்றோருடன் செல்ல உத்தர விடுகிறேன். அகிலாவுக்கும், அவரது பெற்றோருக்கும் போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியிருந்தார்.