செய்திகள்

உரி பகுதியில் ஊடுருவல்: மேலும் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

உரி பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடித்த இந்திய ராணுவம், மேலும் 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளது.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

பாகிஸ்தான் பகுதியில் இருந்து எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவும் முயற்சியில் தீவிரவாதிகள் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். கடந்த சில நாட்களாக ஊடுருவல் அதிகரித்துள்ளது. இந்த ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

ஜம்மு காஷ்மிரின் மச்சில் செக்டார், குப்வாரா மாவட்டம் நவுகாம் செக்டாரைத் தொடர்ந்து இன்று மாலை உரி செக்டாரில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இதனால் உஷாரான பாதுகாப்பு படையினர், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து இரு தரப்பினருக்குமிடையே நடைபெற்ற சண்டையில், மேலும் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. எனவே, எல்லைப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கு காஷ்மீரில் 15 நாட்களுக்குள் 7 முறை ஊடுருவல் முயற்சியை முறியடித்திருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 23 ஊடுருவல் முயற்சியை முறியடித்து, ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் நுழைந்த 39 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.