செய்திகள்

பேராசிரியர் ஜெயராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்- அர்ஜூன் சம்பத்

மத்திய அரசின் திட்டங்களை எதிர்க்கும் பேராசிரியர் ஜெயராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.

மாலை மலர்

சுவாமிமலை:

கும்பகோணம் அருகே சுவாமிமலையில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் 53-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இளைஞரணி மாநில பொதுசெயலாளர் குருமூர்த்தி தலைமை வகித்தார்.

கூட்டத்தில் அர்ஜூன் சம்பத் பேசும்போது கூறியதாவது:-

தஞ்சையில் இருந்து விரைவில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரையை இந்து மக்கள் கட்சி சார்பில் தொடங்க உள்ளோம். இந்து மக்கள் கட்சியின் செயல்பாடு தமிழகம் அளவில் நல்ல முன்னேற்றத்தில் இருந்து வருகிறது. இதேபோல தொடர்ந்து நிர்வாகிகள் செயல்பட்டால் தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.கவை வீழ்த்தி திராவிட கட்சிகளே இல்லாத நிலையை உருவாக்கலாம்.

காவிரி நீரை பொறுத்தவரை பாரத நாட்டின் பொது சொத்து என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. எனவே காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு உரிய உரிமையை சுப்ரீம் கோர்ட்டும், மத்திய அரசும் நிலைநாட்டும் என்பதில் நம்பிக்கை உள்ளது.

காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்காததற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி முக்கிய காரணம். ஆனால் அவரது மகன் ஸ்டாலின் காவிரி நீருக்காக தேவையில்லாத போராட்டங்களை நடத்தி வருகிறார். ஜெயலலிதா இருந்திருந்தால் இதுபோல அவரால் போராட முடியுமா?

தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தவிடாமல் தொடர்ந்து எதிரான போராட்டங்களை தூண்டிவிடும் பேராசிரியர் ஜெயராமனை மத்திய, மாநில அரசுகள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

எந்த கொள்கையும் இல்லாதவராக வைகோ ஏதேதோ பேசி கொண்டிருக்கிறார். அங்கும் இங்கும் மாறி மாறி செல்கிறார். அவரை தமிழக மக்களும், அரசியல் கட்சியினரும் நன்கு புரிந்து வைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.