அனிதா... கிராமப்புற மாணவர்களின் கல்வி உரிமைக்காக உயிர் நீத்த இவரது மரணம் ஒட்டு மொத்த தமிழகத்தை உலுக்கிப் போட்டுள்ளது. சுமை தூக்கும் தொழிலாளியான அனிதாவின் தந்தை சண்முகம், அனிதாவின் டாக்டர் கனவை நெஞ்சில் சுமந்தபடியே தினமும் வேலைக்கு சென்று வந்தார்.
மகளை எப்படியாவது டாக்டராக்கி பார்த்து விட்டுத்தான் கண்மூட வேண்டும் என்று கனவு கண்டார். அதற்கேற்ப படிப்பில் கெட்டிக்காரியாகவே இருந்தார்.
இதனால் மகள் பள்ளிப்படிப்பில் ஒவ்வொரு கட்டத்தை தாண்டிய போதெல்லாம் தந்தை சண்முகம் துள்ளிக் குதித்தார். உறவினர்கள் எங்கள் வீட்டு பிள்ளை டாக்டராகப் போகுது என்று மகிழ்ச்சியில் திளைத்தனர்.
பிளஸ்-2 தேர்வில் 1176 மதிப்பெண்களை எடுத்ததும் அனிதா டாக்டராகி விட்டதாகவே உணர்ந்தார் சண்முகம். ஆனால் மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு அனிதாவின் டாக்டர் ஆசையை அணை போட்டு தடுத்தது.
அதனை தகர்த்தெறிந்து முன்னேறிச் செல்லவே அவர் முயன்றார். இதற்காக சுப்ரீம் கோர்ட்டு படியேறி சட்டப் போராட்டத்தையும் நடத்தினார்.
அரியலூரில் நீட் தேர்வுக்கு எதிராக ரத்தம் சிந்தியும் போராட்டம் நடத்தினார். தனது ரத்தத்தால் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி எதிர்ப்பையும் தெரிவித்தார். இந்திய குடியரசு தலைவர் அவர்களுக்கு என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த கடிதத்தின் தமிழாக்கம் இதுதான்.
‘‘வேறுபட்ட பாடத்திட்டம் என்ற வகையிலேயே கடந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அதே அடிப்படையில் இந்த ஆண்டும் மாணவர்கள் விலக்கு பெற தகுதியானவர்கள் இல்லையா? என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதம் ஏற்படுத்திய தாக்கமே தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிராக மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட முக்கிய காரணமாக அமைந்தது.
இப்படி நீட் தேர்வுக்கு எதிராக அறவழியிலும் சட்ட ரீதியாகவும் தான் நடத்திய போராட்டம் வெற்றியில் முடியும் என்று நம்பினார். ஆனால் இந்த முயற்சிகள் பலன் அளிக்காமல் தோல்வியில் முடிந்ததால் துவண்டு போனார். இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அனிதா போன்ற மாணவிகளின் தலையில் சம்மட்டி அடியாகவே விழுந்தது. இதனால் எல்லாம் முடிந்து போய் விட்டதாகவே துவண்டு துடித்துப் போனார் அனிதா. நீட் தேர்வில் இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து விலக்கு கிடைக்குமா? என்பது போன்ற செய்திகளை மிகுந்த ஆர்வத்துடன் திரும்ப திரும்ப பார்த்து வந்துள்ள அவர் ஒருவித மன கலக்கத்துடனேயே நீட் தேர்வை எதிர் கொண்டார். ஆனால் அவரால் அதில் வெற்றி பெற முடியாமல் போனது. அத்தோடு டாக்டர் கனவும் தகர்ந்தது.
அரியலூர் மாவட்டத்தில் குழுமூர் என்கிற சிறிய கிராமத்தில் பிறந்து டாக்டராக வேண்டும் என்கிற கனவோடு பொம்மை ‘‘ஸ்டெதஸ்கோப்’’புகளை கழுத்தில் மாட்டி தனக்கு தானே அழகு பார்த்த அனிதாவால் இந்த தோல்வியில் இருந்து மீளவே முடியவில்லை.
‘‘நீங்களும் நான் டாக்டராகணும்னு எவ்வளவோ ஆசைப்பட்டீங்கப்பா? நான் தோத்துட்டேனாப்பா? என்று அடிக்கடி தந்தையிடம் கூறி அழுதார்.
இரண்டு வயதிலேயே அம்மா ஆனந்தியை பறி கொடுத்து விட்ட அனிதா அந்த துக்கத்தையெல்லாம் கடந்து.... தூக்கம் கலைந்து டாக்டர் கனவிலேயே மிதந்து கொண்டிருந்தார்.
இவரைப் போன்ற மாணவ-மாணவிகளை மனதில் வைத்துதான் நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டும் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. எதுவும் நடக்கவில்லை. நீட் விலக்குக்காக தமிழகமே காத்திருந்த நிலையில் அனிதாவின் கழுத்தை தூக்கு கயிறு இறுக்கியது. இதனால் ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் தங்கள் வீட்டு பிள்ளை உயிரிழந்து விட்டதாகவே கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
அனிதாவின் தாய் உயிருக்கு போராடிய போது அருகில் ஆஸ்பத்திரி இல்லாததாலேயே உயிர் பிரிந்தது. இதனை சிறு வயதில் இருந்தே கேட்டு கேட்டு அனிதாவின் மனதில் டாக்டராகும் எண்ணம் பசுமரத்தாணி போல பதிந்து போனது. எங்க அம்மாவ மாதிரி இனி யாரும் சாகக்கூடாது. டாக்டராகி கிராமப்புறத்துக்கு சேவை செய்வேன் என்று சொல்லிக் கொண்டே இருந்துள்ளார் அனிதா.
12-ம் வகுப்பில் 1176 மார்க் எடுத்த இவர் பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் 476. இப்படி மதிப்பெண்களில் கோட்டை கட்டிய அனிதாவின் உயிரை எமன் விழுங்கி விட்டான்.
இன்று தமிழகம் முழுவதும் அனிதாவுக்காக ஏராளமான அண்ணன்மார்கள் தங்களது படிப்பை துறந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நீட்டுக்கு எதிராக நிரந்தர விலக்கு வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது. நாடு முழுவதும் ஒரே தகுதி தேர்வை கொண்டு வரும் மத்திய அரசு, அனைத்து மாநிலங்களிலும் ஒரே கல்வியை கொண்டு வராதது ஏன்? என்கிற கேள்வியை எல்லோரும் எழுப்பி வருகிறார்கள். ஜனாதிபதிக்கு அனிதா எழுதிய ரத்தக் கடிதத்திலும் இந்த வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
“இந்தியா முழுக்க பொதுப் பாடத்திட்டம் இல்லாமல் பொது தேர்வு என்பது அநீதியாகும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அநீதிக்கு எதிராகவே அனிதா உயிர் நீத்துள்ளார். அவரின் மரணம் நீட் தேர்வை கொல்லுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த விஷயத்தில் இந்திய மருத்துவ கவுன்சில், இன்னும் சில ஆண்டுகள் அனிதா போன்ற மாணவர்களுக்கு அவகாசம் அளித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் தமிழக அரசும், இனியும் காலம் தாழ்த்தாமல் அடுத்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.