மாஸ்கோ:
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உடனான அமெரிக்க பெண் பத்திரிக்கையாளர் மெகைன் கெல்லியின் சந்திப்பு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரதமர் மோடி அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ள நிலையில், அங்கு இந்த சம்பவம் நடைபெற்றது.
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் புதின் மற்றும் மோடியிடம் பத்திரிக்கையாளர் கெல்லி நேற்று கலந்துரையாடல் நடத்தினார். அப்போது, மோடியை பார்த்து கெல்லி நீங்கள் டுவிட்டரில் இருக்கிறீர்களா என்று கேட்டார்.
மோடி, பத்திரிக்கையாளர் உரையாடல் முழு விவரம்:-
மோடி: நான் உங்கள் டுவிட்டரை பார்த்தேன்
பத்திரிக்கையாளர்: அப்படியா?
மோடி: குடையுடன் இருந்தீர்கள்?
பத்திரிக்கையாளர்: என்னை டுவிட்டரில் பார்த்தீர்களா? நீங்கள் டுவிட்டரில் இருக்கிறீர்களா?
மோடி: ஆமாம்.
பிரதமர் நரேந்திர மோடியை டுவிட்டர் வலைதளத்தில் 30 மில்லியன் பேரும், பேஸ்புக்கில் 41 மில்லியன் பேரும் பின் தொடர்கிறார்கள். உலக அளவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு அடுத்தபடியாக மோடியை தான் அதிகம் பேர் பின் தொடர்கின்றனர்.
இந்த நிலையில், மோடியை பற்றி முறையான தகவல்களை சேகரிக்காமல் பத்திரிக்கையாளரான கெல்லி சென்றது தவறு என்று விமர்சனங்கள் எழுந்தது. அதேபோல், அமெரிக்க பெண் பத்திரிக்கையாளர் டுவிட்டரை மோடி ஞாபகம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.