செய்திகள்

ஆற்காடு அருகே விபத்தில் 2 பேர் பலி

ஆற்காடு அருகே விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் பலியாகினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்காடு:

ஆரணி கொசப்பாளையம் நரசிம்மன் தெருவை சேர்ந்தவர் பூபாலன் (வயது 45). ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்றிரவு வழக்கம் போல் பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பினார்.ஆற்காடு-ஆரணி சாலையில் உள்ள வணக்கம்பாடி அருகே சென்றபோது, எதிரே 3 பேர் ஒரே பைக்கில் தாறுமாறாக அதிவேகமாக வந்தனர்.

அவர்களது பைக் பூபாலன் வந்த பைக் மீது உரசியது. இதில் நிலைத் தடுமாறிய அவர் எதிரே வந்த காரில் மோதி தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த பூபாலன் சிகிச்சைக்காக ஆற்காடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பூபாலன் பலியானார்.

ஆற்காடு அடுத்த திமிரி துர்கம் ஜெயந்தி காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 40). ஓட்டலில் வேலை செய்துவந்தார். நேற்று இரவு திமிரி பஜாருக்கு பைக்கில் வந்துவிட்டு வீடு திரும்பினார். திமிரி பாலமுருகன் மலைக் கோவில் அருகே சென்றார். அப்போது எதிரே வந்த கார், பைக் மீது மோதியது. இதில் ராஜேந்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த 2 சம்பவங்கள் குறித்தும் திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT