செய்திகள்

ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மோட்டார் சைக்கிளில் மணல் அள்ளிய வாலிபர் கைது

ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மோட்டார் சைக்கிளில் மணல் அள்ளிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததை கண்டித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை, அம்பேத்கார்நகர் அண்ணா தெருவை சேர்ந்தவர் கணபதி (வயது 27). இவரது குடிசை வீட்டின் சுவர் பலத்த மழையால் இடிந்து விட்டது.

இதையடுத்து புதிய சுவர் கட்டுவதற்காக அவர் ஆரணி ஆற்றில் சிமெண்டு பைகளில் மணல் எடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தார்.

அப்போது ரோந்து வந்த போலீசார் கணபதியை கைது செய்து ஊத்துக்கோட்டை கோர்டில் ஆஜர் படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

இதனை அறிந்த கணபதியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு ஊத்துக்கோட்டை- பெரிய பாளையம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஊத்துக்கோட்டை துணை தாசில்தார், வருவாய் அலுவலர் ரவி, இன்ஸ்பெக்டர் பரந்தாமன், சப்-இன்ஸ்பெக்டர்கள் நித்யானந்தம், சத்தியபாமா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆற்றில் மணல் அள்ளுவது குற்றம். மணல் அள்ளுபவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் ஊத்துக்கோட்டை- பெரியபாளையம் இடையே சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.