செய்திகள்

டிராக்டர் ஓட்டி நெற்பயிர் சேதம்: ஆரணி டி.எஸ்.பி.பணியிட மாற்றம்

டிராக்டரை ஓட்டி நெற்பயிரை சேதம் செய்து தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட ஆரணி டி.எஸ்.பி.யை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டார். #AraniDSPtransfer

மாலை மலர்

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த காமக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது தம்பி தியாகராஜன். விவசாயிகளான இவர்களுக்கு அதே பகுதியில் சுமார் 16 ஏக்கர் நிலம் உள்ளது.

இந்த நிலத்தின் பட்டா மற்றும் பத்திரம் தியாகராஜன் மகள் சாமுண்டீஸ்வரி பெயரில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலத்தில் அண்ணாமலையின் மகள் சாவித்திரி பயிரிட்டிருந்தார். இந்த நிலம் தொடர்பாக சாமுண்டீஸ்வரிக்கும், சாவித்திரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஆரணி கோர்ட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் பிரச்சினைக்குரிய விவசாய நிலத்திற்கு சாமுண்டீஸ்வரி சென்று உள்ளார். அப்போது அவருக்கும், சாவித்திரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது குறித்த புகாரின் பேரில் ஆரணி டி.எஸ்.பி. ஜெரினாபேகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசாரின் உத்தரவின் பேரில் டிராக்டர் மூலம் நெற்பயிரை சேதப்படுத்தியதாகவும், சாவித்திரியை போலீசார் விசாரணைக்காக ஆரணி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதாகவும் கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். சாவித்திரி மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.

மேலும் இது குறித்து வழக்கு திருவண்ணாமலை மாவட்ட மனித உரிமைகள் கோர்ட்டில் நடந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த காரணத்தினாலும், தனி மனிதனுக்கு தீங்கு விளைவித்த காரணத்தினாலும், மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு போடுவதாக மிரட்டியதாலும் டி.எஸ்.பி. ஜெரினா பேகம் மீது நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

மேலும் அவரை பணியிட மாற்றம் செய்யவும் ஆணையிட்டார்.

இதை தொடர்ந்து ஆரணி டி.எஸ்.பி. ஜெரினாபேகம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு புதிய பணியிடம் வழங்கப்படவில்லை. வேட்டவலம் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த செந்தில் பதவி உயர்வில் ஆரணி டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். #AraniDSPtransfer #tamilnews