செய்திகள்

காஷ்மீர் சிறப்பு அதிகாரி நியமனம் ராணுவ நடவடிக்கையை பாதிக்காது: பிபின் ராவத்

காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது ராணுவ நடவடிக்கையை பாதிக்காது என ராணுவ தலமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் விதமாக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு சிறப்பு அதிகாரியாக புலனாய்வுத்துறையின் முன்னாள் இயக்குனர் தினேஷ்வர் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மத்திய மந்திரிக்குரிய அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. 

காஷ்மீர் மாநிலத்தில் அனைத்து தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் சர்மா, காஷ்மீர் மக்களின், குறிப்பாக இளைஞர்களின் நியாயமான அபிலாஷைகளை அறிந்துகொள்வதற்கும் முயற்சிப்பார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், காஷ்மீரில் பிரச்சனையை தீர்க்க பேச்சுவார்த்தைக்கு அதிகாரி நியமிக்கப்பட்டது ராணுவ நடவடிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தாது என ராணுவ தளபதில் பிபின் ராவத் கூறியுள்ளார். 

இது தொடர்பாக ராணுவ தளபதில் பிபின் ராவத் பேசுகையில், காஷ்மீரில் அனைத்து தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டது, ராணுவ நடவடிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தாது. காஷ்மீர் பிரச்சனையில் அரசு வலிமையான நடவடிக்கையை முன்னெடுத்து உள்ளது, மாநிலத்தில் உள்ள ஒட்டுமொத்த பிரச்சனையையும் சரிசெய்ய மத்திய அரசின் தற்போதைய கொள்கையானது மிகவும் பயனளித்து உள்ளது என்றார். 

பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டது ராணுவ நடவடிக்கையில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய பிபின் ராவத், “என்னுடையை ஒரு வார்த்தை பதில் இல்லை என்பதுதான், பாதிப்பை ஏற்படுத்தாது,” என்றார்.