செய்திகள்

இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யும் முறையை ரத்து செய்யவேண்டும்: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யும் முறையை ரத்து செய்யவேண்டும் என்று திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை:

என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யும் முறையை ரத்து செய்யவேண்டும் என்று திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

என்ஜினீயரிங் கலந்தாய்வு சேர்க்கை நடப்பாண்டில் வழக்கத்திற்கு மாறாக இணைய தளத்தின் (ஆன்லைன்) மூலமாக தான் விண்ணப்பம் பதிவு செய்தல், பணம் செலுத்துதல், இடஒதுக்கீடு செய்தல், ஆணை பெறுதல் ஆகிய அனைத்தும் நடைபெற வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறிப்பாக கிராமப்புற மாணவர்களிடையே மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் வழியில் கல்வி பயின்ற, கிராமப்புறத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளும் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதோ, அதை பூர்த்தி செய்வதோ நடைமுறையில் சாத்தியமா? என்பதை ஆட்சியாளர்கள் கடுகளவும் கருதி பார்த்ததாகத் தெரியவில்லை. பெரும்பாலான மாணவ-மாணவிகளுக்கு மின்னஞ்சல் முகவரி இல்லாத நிலையில் இணையதளத்தின் மூலமாக மாணவர் சேர்க்கை என்பது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும்.

‘நீட்’ தேர்வுக்காக தமிழகத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு நம் மாநிலத்திலேயே தேர்வு மையங்கள் கிடைக்காமல் போனதற்கு இணையதள விண்ணப்பம் தான் காரணம். தமிழகத்தில் காவலர் தேர்வுக்கு 7 லட்சம் மாணவர்கள் எழுதுவதற்கு தேர்வு மையங்களை அமைத்த தமிழக அரசு ‘நீட்’ மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் அமைக்க மத்திய இடைநிலை கல்வி வாரியத்தோடு ஏன் ஒருங்கிணைப்பை நடத்தவில்லை?

அத்தகைய ஒருங்கிணைப்பை நடத்தியிருந்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் குடும்பத்தோடு வேறு மாநிலங்களில் தேர்வு எழுத அலைந்து திரிய வேண்டிய அவலம் ஏற்பட்டிருக்காது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் இதுவரை 2 உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இதற்கெல்லாம் மத்திய-மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

எனவே, நீட் தேர்வு மையங்கள் தேர்வு செய்வதில் எந்த இணையதளத்தின் மூலமாக பாதிப்புகள் ஏற்பட்டதோ, அதே இணையதளத்தின் மூலமாக என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை செய்யவேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணையை உடனடியாக ரத்து செய்யவேண்டும். இல்லையென்றால் இணையதளத்தின் மூலமாக மாணவர்கள் சேர்க்கை நடக்கிற அதேநேரத்தில் நேரிடையாகவும் விண்ணப்பங்களை பெற்று கலந்தாய்வு நடத்துகிற வகையில் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

SCROLL FOR NEXT