சர்வதேச சந்தையில் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் X ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் ஆன்லைன் விற்பனை சார்ந்து ப்ளிப்கார்ட் ஊழியர் மூலம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ப்ளிப்கார்ட்டில் புதிய ஐபோன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செப்டம்பர் 29-ம் தேதி துவங்கும்.
ப்ளிப்கார்ட்டில் ஐபோன் வாங்குவோருக்கு அதே நாளில் விநியோகம் செய்யப்படுவதோடு ஐபோன் 8 முன்பதிவு செய்வோருக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும். முன்னதாக ஆஃப்லைன் விற்பனையாளர்கள் சார்ந்த தகவல்கள் வெளியான நிலையில் தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் புதிய ஐபோன்கள் ப்ளிப்கார்ட்டில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என தெரியவந்துள்ளது.
இந்தியவில் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 22-ம் தேதி துவங்கி, விற்பனை செப்டம்பர் 29-ம் தேதி நடைபெறுகிறது. இதேபோல் ஐபோன் X ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் அக்டோபர் 27-ம் தேதி துவங்கி நவம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது.
புதிய ஐபோன் 8 சீரிஸ் 4.7 மற்றும் 5.5 இன்ச் திரை கொண்டுள்ளது. இதுவரை வெளியான ஐபோன்களில் வழங்கப்படாத அளவு ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே மற்றும் அதிக உறுதியான ஹோம் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹோம் பட்டன் முன்பை விட வேகமாக இயங்கும் திறன் கொண்டுள்ளது.
ஆப்பிள் A11 பயோனிக் சிப் கொண்டுள்ள புதிய ஐபோன் 8 சீரிஸ் இதுவரை வெளியானதில் அதிக சக்திவாய்ந்த ஐபோன் ஆகும். இத்துடன் இவை முந்தைய ஐபோன்களை விட நீண்ட நேர பேட்டரி பேக்கப் கொண்டிருக்கிறது. இத்துடன் ஐபோன் 8 ஸ்மார்ட்போனில் 12 எம்பி பிரைமரி கேமராவும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல் 12 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
ஐபோன் 8 சீரிஸ் தொடர்ந்து ஐபோன் X ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆப்பிள் கீநோட் நிகழ்ச்சியில் அதிநவீன சாதனமாக புதிய ஐபோன் X அமைந்தது. ஐபோன் X ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச், 2436x1125 பிக்சல் OLED சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய டிஸ்ப்ளே கொண்ட முதல் ஐபோன் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த டிஸ்ப்ளே எச்.டி.ஆர்.10 மற்றும் டாஸ்பி விஷன் சப்போர்ட் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோம் பட்டன் நீக்கப்பட்டுள்ள ஐபோன் X ஸ்மார்ட்போன் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அன்லாக் செய்யக் கூடிய வசதியை வழங்குகிறது. முக அங்கீகாரம் (face recognition) வழங்க டூயல்-கோர் சார்ந்த நியூரல் இன்ஜின், ஃபேஸ் ஐடி துல்லியமாக இயங்க வழி செய்யும் ட்ரூ டெப்த் கேமரா சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.