திருப்பதி:
திருப்பதி கபிலத்தீர்த்தம் அருகே வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த அலுவலகத்தை ஆந்திர மாநில தொழில்துறை அமைச்சர் அமர்நாத்ரெட்டி நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக்டத்தலை தடுக்க, கபிலத்தீர்த்தம் அருகே போலீஸ் அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தங்களின் பணியை திறம்பட செய்து வருவது பாராட்டுக்குரியது. நமது நாட்டில் கிடக்கும் மிகவும் அரிதான பொக்கிஷங்களில் ஒன்று செம்மரங்கள். அதனை நாம் பாதுகாத்து எதிர்கால தலைமுறையினருக்கு வழங்க வேண்டியது நமது கடமை.
இதுபோன்ற விலை மதிப்புமிக்க பொக்கிஷத்தை காக்க நமது ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு, செம்மரக்கடத்தல் தடுப்பு போலீஸ் பிரிவை தொடங்கி உள்ளார். இதற்கு ஐ.ஜி.காந்தாராவ் தலைமை ஏற்றப்பிறகு செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களும், அரசியல்வாதிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ராயலசீமா பகுதியினரே செம்மரங்களை பாதுகாக்க வேண்டி உள்ளது. எவ்வளவு எச்சரிக்கை கொடுத்தும், அதனை மீறி செம்மரங்களை வெட்டிக்கடத்தினால் போலீசார் மீதே கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். போலீசார் மீது தாக்குதல் நடத்தினால், துப்பாக்கிச்சூடு நடத்தப்படும்.
அதனை, ஒருசில அரசியல்வாதிகள் தங்களது சுய லாபத்துக்காக மிகவும் கொடுமையான செயல் என விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது. செம்மரக்கடத்தலை தடுப்பது குறித்து மட்டும் அவர்கள் ஏன் வாய்த்திறப்பதில்லை? செம்மர விதைகளை மறைந்த முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமாராவ் ஹெலிகாப்டரில் பறந்தபடி தூவினார். அதன் காரணமாக இன்று செம்மரங்கள் வளர்ந்து பசுமையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.