செய்திகள்

ஆந்திரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பிரவீன் குமார் பதவி ஏற்றார்

புதிதாக உருவாக்கப்பட்ட ஆந்திரா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பிரவீன் குமார் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். #APHighCourt #ChiefJustice #JusticePraveenKumar

மாலை மலர்

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா என்ற தனி மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர் இரு மாநிலங்களுக்கும் பொதுவாக ஐதராபாத் நகரில் ஆந்திரா, தெலுங்கானா உயர்நீதிமன்றம் இயங்கி வருகிறது.

முன்னர் ஆந்திராவின் தலைநகரமாக இருந்த ஐதராபாத் நகரம் தற்போது தெலுங்கானா மாநிலத்துக்கு சொந்தமாகிப்போன நிலையில், ஆந்திரா மாநிலத்தின் புதிய தலைநகரமாக அமராவதி நகரம் உருவாகி வருகிறது.

மிக பிரமாண்டமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் உருவாகிவரும் அமராவதி நகரில் ஆந்திரா மாநிலத்துக்கென தனியாக புதிய உயர்நீதிமன்றம் அமைக்க மத்திய சட்டத்துறை அமைச்சகம்  அனுமதி அளித்தது.

மத்திய அரசின் இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்து கையொப்பமிட்டுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 26-ம் தேதி இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை வெளியிட்டார்.

இந்த உத்தரவை தொடர்ந்து, ஜனவரி முதல் தேதியில் (இன்று) இருந்து அமராவதியில் புதிதாக செயல்பட தொடங்க வேண்டிய இந்த நீதிமன்றம் இந்தியாவின் 25-வது உயர்நீதிமன்றமாகும்.

ஆனால், அமரவாதி நகரில் உயர்நீதிமன்றம் கட்டும் பணிகள் நிறைவடையாததால் விஜயவாடா நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தற்காலிகமாக உயர்நீதிமன்றம் இயங்கும் என ஆந்திர மாநில அரசு தெரிவித்தது.

இந்த பதவியேற்பு விழாவில் ஆந்திரா முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, அம்மாநில மந்திரிகள் நீதிபதிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர். தலைமை நீதிபதியுடன் மேலும் 15 புதிய நீதிபதிகளும் பதவி ஏற்றனர்.

இதற்கிடையே, அமராவதி நகரில் இன்னும் சரியாக கட்டி முடிக்கப்படாத கட்டிடத்துக்கு ஆந்திரா உயர்நீதிமன்றம் மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் ஆந்திர மாநில வக்கீல்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.