செய்திகள்

இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்களே: ஆர்.எஸ்.எஸ். தலைவர் சொல்கிறார்

இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்கள்தான் என்று திரிபுராவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.

மாலை மலர்

அகர்தலா:

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் திரிபுரா மாநிலத்தில் 5 நாள் சுற்றுப் பயணம் செய்கிறார். அகர்தலாவில் நடந்த பேரணியை வழிபாடு நடத்தி தொடங்கி வைத்தார்.

இந்துத்துவம் என்பது இந்து மதத்தில் இருந்து வேறுபட்டது. நமக்கு யாருடனும் பகை கிடையாது. அனைவரும் வளம் பெற வேண்டும் என்றே விரும்புகிறோம். அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே இந்துத்துவத்தின் பொருளாகும். இந்தியாவில் வாழும் முஸ்லிம்களும் இந்துக்கள்தான்.

இந்தியா இந்துகளுக்கான தேசம் ஆகும். உலகின் பல்வேறு பகுதிகளில் கொடுமைகளை அனுபவித்த இந்துக்கள் அடைக்கலம் தேடி இந்தியாவுக்கு வருகிறார்கள்.

1947-ம் ஆண்டில் இந்தியா பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. அதனால் இந்துத்துவத்தின் சாரம் பலவீனம் அடைந்தது இந்து சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சி அடைந்தது.

அதற்கு முன் இந்தியா ஒருங்கிணைந்த நாடாக பல ஆண்டுகள் இருந்தது. அப்போது இந்துக்களிடையே ஒற்றுமை நிலவி வந்தது. இறை நம்பிக்கை கொண்டவர்களும், இறை மறுப்பு கொள்கை உடையவர்களும் ஒருசேர எப்படி இந்தியாவில் வாழ்கிறார்கள் என்பதை உலக நாடுகள் குழப்பத்துடன் பார்க்கின்றனர்.

இந்துக்கள் உண்மை மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த உலகம் வலிமைக்கு மதிப்பு அளிக்கிறது. எனவே நாம் அமைப்பாக இருப்பதே நமக்கு வலிமையைக் கொடுக்கும். எனவே இந்துக்கள் அமைப்பு ரீதியாக பயிற்சி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.